Wednesday, September 10, 2008

சுமை தாங்கியின் "புலம்பல்"



எங்கோ பிறந்தேன் . . . ஏதோ வாழ்ந்தேன் என்றில்லாமல் . . .



நல்ல குடும்பத்தில் பிறந்தேன். நல்ல பிள்ளையாய் வளர்ந்தேன். சுமாராய் படித்தேன். பள்ளி படிப்புகூட முடிக்கவில்லை. 7 வது வரை தான். மீண்டும் வெளி நாட்டில் படித்தேன். அதுவும் அரை குறைதான்.



பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவிடம் தொழில் கற்றேன். காலப்போக்கில், கற்ற வித்தையில் குருவை மிஞ்சிய சிஷ்யனானேன். அதுவும் அவரின் மறைவிற்கு பின்னர்.



என் தந்தையை பற்றி ஒரு வார்த்தை . . . கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்தவர். பின்னர், பாய்மர கப்பலில் நீண்ட நாட்கள் பயணித்து (உலக யுத்தர்த்திக்குமுன்) வெளி நாட்டிற்கு சென்றவர். அவரும் ஐந்தாவது வரைதான் படித்தவர்.



திருமணத்திற்கு முன், குடும்பத்திற்காக, சம்பாத்தியம் ஒன்றே குறிக்கோளாய் இருந்த எனக்கு . . நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் மற்றும் சிலர் கூட துரோகியாக செயல்பட்டு என் தொழில் வளத்தை கெடுத்தனர்.



திருமணம் நடந்தது .



பங்குதாரர்களின் பங்கு பிரிவினையும் நடந்தது.



பல பல பிரச்சினைகள். நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் கஷ்டப்பட்டோம்.



தந்தை மறைந்த சில காலத்திற்கு பின், தாய், சகோதர சகோதரிகள் தந்தையின் நெருங்கிய உறவுகள், மனைவி பிள்ளைகள் என்று என் சொந்த குடும்பத்திற்காக மீண்டும் பாடுபட்டேன்.


மீண்டும் வளர்ச்சி அடைந்தேன்.



வட்டத்திற்குள் தெரிந்த நான், வட்டாரத்திற்கும் பின் மாகாணங்கள் வரை தெரிந்தவனானேன். அண்டை நாட்டில் தொழில் தொடங்கவும் செய்தேன்.


அதிர்ஷ்டம் என்னை அரவணைத்தது. நிறைய சம்பாதித்தேன்.



பல திருமணங்களுக்கும், பலரின் படிப்பிற்காகவும், முகம் தெரியாதவர்களுக்கு ஆதரவும் வைத்திய உதவிகளும் என் சம்பாத்தியத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.



படிப்பில்லாத நான் எப்படி இந்த அளவிற்கு முன்னேறினேன்?

எல்லாம், என் அனுபவ படிப்புதான். இப்பொழுது மூன்று மொழிகளில் எழுத, பேச, படிக்க தெரியும்.



கம்ப்யூட்டரில், இதுவரை சொந்த பயிற்சி மட்டும் தான். எந்த பயிற்ச்சி பட்டறைக்கும் போனதில்லை.



இது என் முதல் முயற்சியும் கூட.



பிள்ளைகளை படிப்பிற்காக மேல் நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். படித்தார்கள். பட்டம் பெற்றார்கள். இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள். தனிக்குடித்தனமும் ஆனார்கள்.



பாசக்கார பிள்ளைகள்.



அவர்கள் எனக்கு அளித்த பரிசு, அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை. அதுவும் அறுபது வயதில் !



என் கடின உழைப்பின் வயது, நாற்பத்திரெண்டு வருடங்கள்.



சிறு வயதிலிருந்து குடும்ப சுமையை சுமந்த நான், இன்று குடும்பத்துக்கு சுமையாய் இருக்கின்றேன்.



நற்குணம் கொண்ட மனைவியின் மறைவிற்குப் பின் பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாகி போனேன்.



இப்பொழுது மிஞ்சியதெல்லாம் . . . தனிமை . . . தனிமை . . . தனிமை.



சம்பாதித்த பணத்தில் எனக்கென்று சேர்த்து வைக்காததால், கவுரவமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றேன்.



இதுதான் இந்த "சுமை தாங்கியின்" கதை.



Sorry "PULAMBAL"


இல்லை . . . இல்லை . . .



இனிமேல் தான் இன்னொரு புதிய சகாப்தம் தொடங்க போகிறது . . . பொறுத்திருந்து பார்ப்போம் . . .


இன்னும் என் திறமை மங்கவில்லையே !